நாடு முழுவதும் உள்ள 116 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 259 மையங்களில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி ஒத்திகை (Dry run) இன்று (ஜனவரி 02) தொடங்கியது.

கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அமெரிக்காவின் பைசர், இந்தியாவின் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 02) நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் (Dry run), கோவிட்-19 தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதை எவ்வாறு மக்களுக்கு போடவேண்டும் என்றும், இதன் மூலம் தடுப்பூசி வழங்கலின் போது என்னென்ன தடைகள் ஏற்படுகிறது, அவை எவ்வாறு அகற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒத்திகை நடைபெற்றது.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை தொடங்கி வைத்தார். மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், தடுப்பூசி போடுவதற்கான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நாடு முழுவதும் முதற்கட்டமாக 1 கோடி சுகாதார மற்றும் 2 கோடி முன்கள பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தெரிவித்து உள்ளார்.

அதேபோல், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை, இன்று சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில் தொடங்கியது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகையை தொடங்கி வைத்தார். சென்னையில் மட்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் மருத்துவப் பணியாளர்கள், ஊடகவியாளர்கள் என 6 லட்சம் பேருக்கு, நாள்தோறும் 100 பேர் வீதம் தடுப்பூசி போடப்படும். சுகாதார பணியாளர்கள் ஏற்கனவே 6 லட்சம் பேர் கொரோனா தடுப்பு ஊசிகள் பதிவு செய்துள்ள நிலையில், அடுத்ததாக முன் களப் பணியாளர்கள் அதனைத் தொடர்ந்து முதியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

தடுப்பூசி திட்டத்தைக் கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடையவர்கள் கோ-வின் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களின் தகவல்கள் உறுதி செய்யப்படும். தடுப்பூசி போட்ட பிறகு குறுந்தகவல் அனுப்பப்படும்.

க்யூ ஆர் சான்றிதழும் உருவாக்கப்படும். எத்தனை தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டன, எத்தனை பேர் கலந்து கொண்டனர், எத்தனை பேர் வெளியேறிவிட்டார்கள் போன்ற அறிக்கைகளும் செயலியில் உருவாக்கப்படும். தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன கிடங்குகளின் வெப்பநிலையையும் நிகழ்நேரத்தில் செயலி அனுப்பும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி; நிபுணர் குழு ஒப்புதல்