தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சிறார்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாகவே வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10,25,059 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தற்போது நிலைமை மீண்டும் மோசமாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காம் நாளாக வைரஸ் பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 3750 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 29,256 பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2440 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் சிறார்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி 128 சிறார்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மெல்ல உயர்ந்து வந்த இந்த எண்ணிக்கை தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 வயதிற்குட்பட்ட 436 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,071 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 9,27,440 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பும் 53 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் நீங்கள் கொரோனா வைரசின் கூட்டாளி: அமைச்சரை விமர்சித்த நடிகர் சித்தார்த்