உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மனிதாபிமானமற்ற வகையில் விநியோகித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க: சீனாவிற்கே திரும்ப அனுப்பப்படும் ரேபிட் டெஸ்ட் கருவிகள்- கொரோனா தோல்விகள்

ஆக்ராவில் சாரதா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனம், தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக மாற்றப்பட்டு ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு அளிக்கப்படும் காட்சி தான் தற்போது தேசிய அளவில் வைரலாகி உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.

ஆக்ராவில் கோரண்டைன் மையம் ஒன்றில், இரும்பு கேட்டின் முன்பு தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள் தூக்கி வீசப்படுகின்றன. அதனை எடுப்பதற்காக ஒன்றாக கூடி நின்று ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுகின்றனர். இதேபோல் அவர்களுக்கு வழங்கப்படும் தேநீர் உள்ளிட்ட பானங்களும் இரும்பு கேட்டின் வெளியே ஒரு கட்டில் போடப்பட்டு அதில் வைக்கப்படுகிறது.

நாடு தழுவிய அளவில் கொரோனா நோயாளிகளை அணுகும் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தவறியதன் விளைவே இது போன்ற கொடூர நிகழ்வுக்கு சான்றாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண நலம்பெற்ற பின்னரும் அவர்களை ஒதுக்கி வைப்பது போன்ற அவலங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

மேலும் வாசிக்க: சாலையில் இருமியவரை பொதுமக்களே அடித்து கொன்ற கொடூரம்