சீனாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்களிடம் வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை திரும்ப ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்காக சோதனைகளை பரவலாக்க வேண்டும் என்று அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்தி விடலாம் என மத்திய, மாநில அரசுகள் சீனா, தென் கொரியாவிலிருந்து அதைப் பெற ஒப்பந்தம் போட்டது. அதன்படி சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் இந்தியா வரவழைக்கப்பட்டு மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே ஸ்பெயின், ஃபிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகள் சீனாவிடம் பெற்றிருந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் சரியில்லை என அவற்றைத் திருப்பி அளித்து வந்தன. இந்நிலையில் இந்தியா வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளும் சரியான முடிவுகளைக் காட்டுவதில்லை என சில மாநிலங்கள் கடந்த வாரம் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் இன்று அதிரடியாக, சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்த கிட்டுகளை அந்த நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பும் படியும் மாநிலங்களுக்கு ICMR அறிவுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அளித்த பேட்டியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிக்காட்டுதல்படி அந்த கிட்டுகள் திருப்பி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் என்றும் அதற்கு நாம் செலுத்திய பணம் திரும்பப் பெறப்படும். மக்களின் பணம் ஒரு ரூபாயைக்கூட நாங்கள் வீணாக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: மும்பை போலீஸை கலங்க வைக்கும் கொரோனா

அதே வேளையில் இனி மாநில அரசுகள் தன்னிச்சையாக இதுபோன்ற கருவிகளைக் கொள்முதல் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைமுறையில் உள்ள பிசிஆர் எனப்படும் பரிசோதனை முறை மட்டும்தான் இனி செய்ய முடியும். இதனால் அதிவேகமாக பரிசோதனைகள் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.