தடகளத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக விளங்கி வருபவர் ஹிமா தாஸ், தன்னுடைய ஆரம்ப காலத்தில் தன்னுடைய தந்தை வாங்கிக் கொடுத்த ‘ஷூ’வில் அடிடாஸ் என்று தன்னுடைய கைகளால் எழுதி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் அன்டர் -20 பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று கவனத்தை பெற்றவர் ஹிமா தாஸ். இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், தன்னுடைய பயிற்சியை என்ஐஎஸ் பாட்டியாலாவின் உள்அரங்கத்தில் மேற்கொண்டு வருகிறார். இந்த ஊரடங்கு சூழலிலும் தன்னுடைய வீட்டை விட்டுவிட்டு, தன்னுடைய கனவைத் துரத்தும் வகையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஹிமா தாஸ்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிய ஹிமா தாஸ், தன்னுடைய ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கரை தான் நேரில் கண்டபொழுது தன்னையறியாமல் அழுததாக தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் தன்னுடைய ரோல் மாடலை சந்திப்பது என்பது மிகச் சிறந்த தருணம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும், இதன்மூலம் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள மேலும் கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும், அதனால் தீவிர பயிற்சி மேற்கொண்டு பதக்கங்களை வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

ஹிமா தாசை தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்துள்ள அடிடாஸ், அவரது பெயர் பொறிக்கப்பட்ட ஷூக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஹிமா தாஸ், தன்னுடைய ஆரம்ப காலத்தில் தன்னுடைய தந்தை வாங்கிக் கொடுத்த ஷூவை உபயோகித்த தான், அதில் அடிடாஸ் என்று தன்னுடைய கைகளால் எழுதி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: சிஎஸ்கே அணியில் விளையாட 13 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்- தினேஷ் கார்த்திக்