வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 15வது நாளை எட்டியுள்ள நிலையில், அதானி, அம்பானிக்கு சொந்தமான பொருள்களைப் புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய முன்மொழிந்த வரைவு யோசனையை நிராகரித்துள்ள விவசாயிகள், வரும் 12 ஆம் தேதி டெல்லி- ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முடக்குவதாக அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் டெல்லி சிங்கு பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில், “டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகள் தலைநகருக்குள் நுழைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விரைவில் முடிவெடுப்போம்.

அத்துடன், பஞ்சாபில் இழுத்து மூடியதைப் போல், நாடு முழுவதிலும் உள்ள அதானி, அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ஷாப்பிங் மால்களுக்கு எதிராகவும், அந்த நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் குறிப்பாக அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சிம் கார்டுகளைப் புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கை தொடர்பாக டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று (டிசம்பர் 09) சந்தித்துப் பேசினர்.

அதில், இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கையில் பின்வாங்குவதற்கோ, சமரசத்துக்கோ இடமில்லை என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிறகு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை தோல்வி; சுங்கச்சாவடிகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு