வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பான விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையே நடந்த 10வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 57வது நாளாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை கைவிடக் கோரி, மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் விவசாயிகள் சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு, அதற்கான ஒத்திகையும் விவசாயிகள் வெற்றிகரமாக நடத்தினர்.

இந்நிலையில் மத்திய அரசு இன்று (ஜனவரி 20) விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய 10வது கட்ட பேச்சுவார்த்தையில், ஒன்றரை ஆண்டுகள் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்து உள்ளார்.

ஆனால் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளதால், 10வது கட்ட பேச்சுவார்த்தை எந்த வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது, “வேளாண் சட்டங்களை ஏற்கனவே ஒன்றையாண்டுகள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டதாக மத்திய அரசு கூறியது. வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்வதில் எந்த உபயோகமும் இல்லை. சட்டத்தை முழுவதும் திரும்பப்பெற வேண்டும்.

இது தொடர்பாக நாளை விவசாயிகளுடன் ஆலோசித்து நாளை மறுநாள் நடைபெறும் 11வது கட்ட பேச்சு வார்த்தையின் போது தெரிவிக்கப்படும்.

மேலும் விவசாயிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பபெற வேண்டும் என அரசை வலியுறுத்தினோம். இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை தரும்படியும் மத்திய அரசு கேட்டுள்ளது” என்றனர்.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறுகையில், “ஒன்றரை வருடங்கள் வரை சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளது. அரசின் இந்த பரிந்துரை குறித்து ஆலோசனை செய்து முடிவு நாளை இறுதி செய்வதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தையில் தற்பொழுது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்: மத்திய வேளாண் அமைச்சர்