அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக, அதிபர் டிரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் 2வது முறையாக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில், தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியதன் காரணமாகவே நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டு பெரும் கலவரம் நடந்தது.

கலவரத்தை கட்டுப்படுத்த நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பின் பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலகவேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.‌

சர்ச்சை பதிவுகள்: டிரம்ப் டிவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்

இந்நிலையில், டிரம்பை பதவி நீக்குவதற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நடைபெற்றது. பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானத்துக்கு அதிபர் டிரம்ப் சார்ந்துள்ள குடியுரசுக் கட்சியின் எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர். தீர்மானத்துக்கு ஆதரவாக 232 பேரில்197 பேர் வாக்களித்தனர்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எம்.பி.க்களான அமி பேரா, ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பதவி நீக்கத் தீர்மானம், அடுத்து செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

ஆனால்,செனட்சபை 19 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். எனவே, செனட் அவையில் இது விவாதிக்க வேண்டியது இருக்காது. குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதுகுறித்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி கூறுகையில், “நம்முடைய தேசத்துக்கு எதிராகவே அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். அதிபர் தேர்தல் நடந்ததில் இருந்து, நிலுவையில் உள்ள தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஆனால், தனது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து பொய்களைக் கூறி நம்ப வைத்தார். இறுதியாக அவரின் பேச்சால் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என அனைவரும் உணர்ந்தோம். ஆதலால், அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிரதிநிதிகள் சபையிலிருந்து தீர்மானம்,செனட் அவைக்கு அனுப்பப்படும்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபர் மீது 2வது முறையாக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; 4 பேர் பலி