மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், திருச்சி சிறையில் இருந்து இன்று (13.1.2021) அவர் விடுவிக்கப்பட்டார்.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் 20 நாட்கள் கழித்து கடந்த 5 ஆம் தேதி, கடந்த கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று (12.1.2022) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளது எனத் தெரிவித்தனர்.

ஆனால் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்கள், அரசியல் உள்நோக்கத்தோடு அவசரம் அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்றம் சாட்டினர்.

அப்போது நீதிபதிகள், ‘ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்களை துன்புறுத்தியது ஏன்? முன்ஜாமின் மனு விசாரணையில் இருந்த போது அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொண்டது ஏன்? என்பது போன்ற சரமாரியான கேள்விகளை எழுப்பி, காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

மேலும் ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவருக்கு 4 வார இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து 7 நாட்களுக்கு பிறகு இன்று (13.1.2022) காலை 7.15 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.