பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் ஒன்றிய அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த வாரத்திலிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று ஒன்றிய பாஜக அரசு மறுத்துள்ளது.

இதனிடையே மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஆகியோர் பெகாசஸ் விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அந்த மனுவில், “ஏராளமான விளைவுகளை உண்டாக்கக் கூடிய பெகாசஸ் விவகாரம் தொடர்பான மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கிய பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை ஒடுக்கும் வகையில் விசாரணை அமைப்புகளுக்கு உளவு பார்க்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு அல்லது அதன் விசாரணை அமைப்புகள், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு செயலியைப் பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உளவு பார்க்க லைசன்ஸ் பெற்றிருக்கிறதா என்பதை ஒன்றிய அரசு வெளிப்படுத்த வேண்டும்.

உலகளவில் பல்வேறு புகழ்பெற்ற நாளேடுகள், இதழ்கள் வெளியிட்ட தகவலில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல இந்தியர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஆதலால், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். செல்போன்களை ஒட்டுக் கேட்பது என்பது கிரிமினல் குற்றமாகும். தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66, 66பி, 66இ, 66எப் ஆகியவற்றின் கீழ் செல்போன்களை ஒட்டுக்கேட்பது குற்றமாகும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைவேர் மூலம் செல்போன்களை ஒட்டு கேட்ட ஒன்றிய பாஜக அரசு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!