டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. குக்கர் சின்னம் கோரி டிடிவி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், டிடிவி தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் இவ்வாறு வழங்கியுள்ளது.
 
கடந்தாண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அதில் வெற்றி பெற்றார்.
 
இதையடுத்து அமமுக என்ற கட்சியை தொடங்கிய அவர் குக்கர் சின்னத்தையே தனக்கு ஒதுக்க வேண்டும் என கோரினார்.
 
இதனிடையே திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. அப்போது அதில் போட்டியிட குக்கர் சின்னத்தை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கையில் டிடிவி தினகரனின் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்திருந்தது.
 
மேலும் பொது பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது என கூறியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
 
அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி உத்தரவிட முடியாது.
 
மேலும் டெல்லி ஐகோர்ட்டில் உள்ள இந்த இரட்டை இலை வழக்கை 4 வாரத்திற்குள் முடிக்கவேண்டும். 4 வாரத்திற்குள் அவ்வழக்கை முடிக்காவிட்டால் இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.
 
தேர்தல் ஆணையம் ஏற்கனவே டிடிவி தினகரனின் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றம் திரும்பவும் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று கூறி உள்ள தீர்ப்பு தினகரனுக்கு பெருத்த பின்னடைவாகவே கருத வேண்டியுள்ளது என்று சட்ட வல்லுனரகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த தீர்ப்பு தங்கள் விரும்பிய வண்ணமே வந்து உள்ளதால் அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் வட்டாரங்கள் மகிழச்சியை தெரிவித்த வண்ணம் உள்ளனர்..