இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சம் பெறலாம், தினசரி பாதிப்புகள் 2 லட்சம் வரை இருக்கலாம் என ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 3,06,19,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 553 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,03,281 ஆக உயர்ந்துள்ளது. 2.97 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இதில் கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு குறித்து தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் உருமாற்றம் அடைந்த வைரஸ், தடுப்பூசியின் செயல் திறன் ஆகியவை 3வது அலையின் முக்கிய காரணிகளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழுவில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி வித்யாசாகர் கூறுகையில், 3வது அலையில் பாதிப்புகள் நிச்சயம் இருக்கும் என்றும், ஆனால் 2வது அலை அளவிற்கு உயிரிழப்புகள் இருக்காது என்றும் கணித்துள்ளார். 3வது அலையால் தினசரி பாதிப்புகள் 2 லட்சம் வரை இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்ட் பாஜகவில் கோஷ்டி மோதலால் குறளிவித்தையான முதல்வர் பதவி