மத்திய அரசின் 11 மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளதால் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எனக் கூறி நீட்டைத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கி இருப்பது ஏன்? தனியான இடஒதுக்கீட்டு முறை எதற்கு? வெண்ணெய் ஒரு கண்ணில்; சுண்ணாம்பு மறு கண்ணிலா?

மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர் போன்ற தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு (INI-CET) மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்று அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதேபோல் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்கள் 1500 ரூபாய் செலுத்தினாலே போதும் என்று இன்னொரு ஒரு பேதமும், துரோகமும் இழைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2017 முதல் நீட் தேர்வை மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் கூட்டணியாக இணைந்து வலுக்கட்டாயமாகத் திணித்ததால், இதுவரை 13 மாணவ மாணவியர் உயிர்ப் பலியாகியிருக்கிறார்கள்.

நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கவே முடியாது என்று தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய இரு மசோதாக்களை மசோதாக்களை நிராகரித்தார்கள். இன்றைக்கு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்பது ஓர வஞ்சகத்தின் உச்சக்கட்டமாகும்.

எனவே மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய பாஜக அரசு இப்போது அனுமதி வழங்கி விட்டதால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று அறிமுகப்படுத்திய நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

அதேபோல் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லாமலேயே முதுநிலை மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திடவும், அந்த மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றிடவும் அனுமதித்திட வேண்டும் என்று மத்திய பாஜக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவர்களுக்கு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் 50% உள் இடஒதுக்கீட்டைத் தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் வழங்கிட முதலமைச்சர் உடனடியாக கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சமூகநீதிமீது ஒவ்வொரு நாளும் தாக்குதல்! தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11 மருத்துவக் கல்லூரிகள் என்று கூறி, தனி நுழைவுத் தேர்வாம் – தனி ஏற்பாடாம்! தமிழக எம்.பி.,க்கள் மற்ற மற்ற மாநில எம்.பி.,க்களையும் ஒருங்கிணைத்து சமூகநீதியைக் காக்க முன்வரட்டும்!” என்று கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசின் ‘INI-CET’ தனி நுழைவுத் தேர்வுக்கு கல்வியாளர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு- வலுக்கும் கண்டனங்கள்