கொரோனா தொற்று பேரிடர் பணிகளை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட PM Cares Fund வெளிப்படைத் தன்மை குறித்து 100 முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களிடம் நிவாரண நிதி கோரிய பிரதமர் மோடி,

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிவாரணம் (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund)- PM Cares Fund என்கிற பெயரில் நிதி பெறுவதற்கான புதிய வங்கிக் கணக்கை துவக்கினார்.

‘PM Cares Fund நிதியத்துக்கு நிதியளியுங்கள். இது என் சக இந்தியர்களுக்கான கோரிக்கை’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். PM Cares Fund தலைவராக பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை, உள்துறை, நிதித்துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

PM Cares Fund உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, ஏற்கனவே பிரதமர் தேசிய நிவாரண நிதி (PMNRF) இருக்கும் போது புதிய கணக்கை தொடங்கியது ஏன்? எனவும், அதன் செயல்பாடுகள் குறித்தும் பல கேள்விகள் எழுந்தன. பிரதமர் மோடி தொடங்கிய PM Cares Fund-ல் வெளிப்படைத்தன்மை இல்லை.

இந்த நிதியம் எப்படி நிர்வகிக்கப்படப் போகிறது? எவ்வளவு நிதி நன்கொடையாகப் பெறப்பட்டது? யாரிடமிருந்து பெறப்பட்டது? இந்தக் கேள்விகளுக்கான எந்த பதிலும் PM Cares Fund இணையதளத்தில் இல்லை. பிரதமர் அலுவலகமும் இது தொடர்பாக தகவல்கள் அளிக்க மறுக்கிறது என்றும் எதிர்க் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் புகார் எழுப்பினர்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 100 பேர் அடங்கிய குழு, PM Cares Fund குறித்து பிரதமர் மோடிக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. அதில் நன்கொடையாக வசூல் செய்யப்பட்ட நிதி விவரங்கள், அதன் செலவினங்கள், ரசீதுகள் ஆகியவற்றை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

மேலும் PM Cares Fund எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது மற்றும் நிர்வகிக்கப்பட்ட விதம் ஆகியவைகள் குறித்த பல கேள்விகளுக்கு மத்திய அரசு முறையாக பதிலளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இக்கடிதத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா அக்னிஹோத்ரி, எஸ்.பி.அம்ப்ரோஸ், ஷரத் பெஹார், சஜ்ஜாத் ஹாசன், ஹர்ஷ் மந்தர், பி ஜாய் ஓமன், அருணா ராய், மது பதுரி, கே.பி.பி.ஜி.ஜேநம்பூதிரி மற்றும் ஜூலியோ ரிபேரோ உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

PM Cares Fund- அரசாங்க நிதி அல்ல; சொல்கிறது பிரதமர் அலுவலகம்