10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஜனவரி 19) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பொதுத் தேர்வுக்காக 40% குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. அதனையடுத்து தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது.

மத்திய அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 9,10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால், பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர்களை சந்தித்து கேட்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள், மாணவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாணவர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அதேபோல் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை செனாய் நகரில் அமைந்துள்ள திருவிக அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பேசிய பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்பட உள்ளது.

பள்ளிகள் திறந்த உடன், சுகாதாரத்துறை சார்பில், வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வார காலத்திற்கு பிறகு, சுகாதாரத்துறை சார்பில், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதேனைகள் செய்யப்பட உள்ளது.

பள்ளி வரும் மாணவர்கள் பழைய இலவச பேருந்து பயண அட்டை மற்றும் இலவச பேருந்து பயண அட்டை இல்லை என்றாலும், பள்ளி சீருடையில் வந்தாலே அவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் குறித்த விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 19 ஆம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் குறித்த விவரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாடங்களை குறைக்காமல், பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள பயிற்சி வினாக்கள், மாதிரிகள், செய்முறைகள், பயிற்சிகள், போன்றவற்றைதான் குறைத்துள்ளதாகவும், தற்போதுள்ள 3 மாத காலத்தில் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாது என்றும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அஞ்சலக தேர்வை தமிழிலும் எழுதலாம்; மத்திய அரசு பல்டி