கடலூர் அருகே பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த மாணவி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கடலூர் முதுநகர் அருகே கோதண்டராமபுரம் அடுத்த கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, கூலி தொழிலாளி. இவரது மகள் காவ்யா (17). முதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
 
நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் காவ்யா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இருந்தபோதிலும் மதிப்பெண் குறைவாக அதாவது 600க்கு 244 மதிப்பெண் மட்டுமே (41 சதவீதம்) பெற்றிருந்தாராம்.
 
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட காவ்யா அழுது கொண்டே வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். ஊருக்கு அருகே உள்ள தண்டவாளத்தின் அருகே நீண்டநேரம் அமர்ந்திருந்த காவ்யா, கடலூரில் இருந்து சிதம்பரம் மார்க்கமாக சென்ற ரயில்முன்பு திடீரென பாய்ந்தார்.
 
ரயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்தவெள்ளத்தில் பிணமானார். தகவல் அறிந்ததம் முதுநகர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.