தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) மாநில மொழிகளுக்கான மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு கல்வியாளர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. அதனை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து.

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, மற்றும் 14 முதல் 18 வயது ஆகிய மாணவர்களுக்காக பாடமுறை மாற்றப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவுக்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு வெளியிடப்பட்ட நிலையில் மாநில மொழிகளிலும் தேசிய கல்விக் கொள்கையை மொழிபெயர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தற்போது தேசிய கல்விக் கொள்கை 2020, 17 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை 2020 மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்; தேசிய அளவில் டிரெண்டான #ResignModi