கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காததால் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று #ResignModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாகவும், மேலும் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மத்திய அரசு அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மாநில அரசுகள் வார இறுதி ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பகல் நேரங்களில் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு, குறைந்த அளவிலான மக்களுக்கே தடுப்பூசி போடப்பட்டிருப்பது, தடுப்பூசி உற்பத்தியை பொதுத்துறை நிறுவனங்களிடம் வழங்காதது,

கொரோனா கட்டுப்பாடு விவகாரத்தில் பாஜக ஆளும் மாநிலம், பாஜக அல்லாத மாநிலம் என்று பாகுபாடு பார்ப்பது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதோடு,

வடமாநிலங்கள் பலவற்றில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்சிஜன் இல்லாமலும் பலர் உயிரிழக்க நேரிடும் நிலையில் உயிரிழப்பையும் பாதிப்பையும் குறைத்து காட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய அரசு மீது எழுந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று #ResignModi ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போதைய நெருக்கடிக்கு சரியான பதில் மோடி ராஜினாமா செய்வதுதான். கொரோனா முடிந்துவிட்டதாக நம்மை நம்ப வைத்த பிரதமர் மோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வினியோகம் செய்ய ஆரம்பித்தார். ஆக்ஸிஜன், மருந்துகளை சேமித்து வைக்கவில்லை. இரண்டாவது அலைக்கு மோடி தயாராகவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.