மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை ஒன்றிய பாஜக அரசு டெல்லிக்கு திரும்ப அழைத்திருந்த நிலையில், அவரை முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி காத்திருக்க வைத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. பிரதமர் மோடி உடனான ஆலோசனை கூடத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,

அங்கு யாஸ் புயல் சேத விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை ஒப்படைத்துவிட்டு, திகாவில் மீட்பு பணிகளை பார்வையிட வேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்த சில மணி நேரத்தில் அம்மாநிலத் தலைமைச் செயலாளரை திரும்பப் பெறுவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.

மேலும் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை உடனடியாக விடுவித்து, மே 31 ஆம் தேதி ஒன்றிய பணியாளர் பயிற்சி துறையில் பணியில் சேருமாறு உத்தரவிட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த உத்தரவை முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கவில்லை.

இதனைத்தொடர்ந்து, மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மத்திய பணிக்கு மாற்றிய ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து, உத்தரவை திரும்பப் பெற கோரி மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பினார். அதில், மாநில அரசு பணியில் உள்ள அதிகாரியை மத்திய அரசு எப்படி திரும்பப் பெறலாம்.

இந்திய வரலாற்றிலேயே மாநில அரசை கேட்காமல் தலைமைச் செயலாளர் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றப்படுவதில்லை. மேற்கு வங்கத்தில் புயல் சேத நிவாரணப் பணியில் தலைமைச்செயலாளர் அலபன் ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியால் ஒன்றிய பாஜக அரசு பழிவாங்கலில் ஈடுபடுகிறது. அரசு அதிகாரிகளின் மன உறுதியை சீர்குலைக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் அலபன் பந்தோபத்யாய் இன்று (31-5-2021) பணியில் இருந்து ஒய்வு பெறுவதை அடுத்து, புதிய பொறுப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். அலபன் பந்தோபத்யாயை முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமித்து மம்தா உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கை; முதல்வர் மம்தா உருக்கமான பேச்சு