அதிமுக ஆட்சியில் ஊழல் மோசடி, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், நிதி நிர்வாக திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை அறிக்கை (CAG) தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது, தனியாரிடம் இருந்து மிக அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யப்பட்டதால் தமிழ்நாடு மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, “கடந்த ஆட்சியில் தனியார் துறையிடமிருந்து மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அதிக குளறுபடிகள் இருப்பதால் தான் இழப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக ஆட்சியில் ஊழல் மோசடி, நிதி நிர்வாக திறமையின்மையால் பல ஆயிரம் கோடி நஷ்டம் என 2018, 2019, 2020 ஆண்டிற்கான இந்திய தணிக்கை அறிக்கையின் (CAG) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மின்சார கொள்முதலால் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கை 24-06-2021 நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதில், “அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய மின் உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கூடுதல் செலவாக ரூ.2,381.54 கோடி ஏற்பட்டுள்ளது.
உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ.2,099.48 கோடி ஏற்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் கடைநிலையில் இருந்த மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ. 493.74 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
குறைந்த விலையில் பெற வேண்டிய மின்சாரத்தை பெறாமல் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் டான்ஜெட்கோவுக்கு ரூ.349.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கொண்ட அளவில் மின்சாரத்தை வாங்காததால் TANGEDCO கூடுதலாக அளித்த தொகை ரூ.122.8 கோடியாக உள்ளது.
மின் கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்காதால் ஏற்பட்ட நஷ்டம் ரூ.39.48 கோடியாகும். வெளி மாநிலங்களில் இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரத்தை பெறாமல் உள்ளூரில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ.1,055.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தப்படி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ.712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துக்கு வந்து சேராத மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் ரூ.242.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்திட்டங்களை தொடங்காத நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் டான்ஜெட்கோவுக்கு ரூ.605.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூ.93.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2015-2018 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.544.44 கோடியாகும்.
மேலும் ஜிஎம்ஆர் மின்கார்ப்பரேன் நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த ஒப்ந்தம் 2014 பிப்ரவரி மாதத்துடன் முடிந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இதனால் 737.40 மி.யூனிட் மின்சாரம், 824.77 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு யூனிட் 12.77 ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஒப்பந்ததை நீடிக்கக்கூடாது என தணிக்கையின் போது கூறப்பட்டுள்ளது. அப்போது சந்தை விலையில் யூனிட் 3.39 மற்றும் 5.42 ரூபாய் பெற வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய் அளவிற்கு ஜிஎம்ஆர் மின் கார்ப்பரேன் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வாங்கியுள்ளது. இதனால் 424.43 கோடி ரூபாய் செலவை மிச்சப்படுத்தி இருக்கலாம்” என்று ” என CAG அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறவழியில் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து; முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்