ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களை அரசியலாக்கி தேர்தல் களத்தில் லாபம் பெற முடியுமா என சூழ்ச்சிக் கணக்கை பாஜக வினர் போடுகிறார்கள் என்றும் ,
 
மேலும் தனது பிறந்த நாளில் பேனர்கள் வைக்காதீர்கள் என்றும் . தேர்தல் நேரம் என்பதால், ஒலிபெருக்கிகள் கட்டாயம் கூடாது என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது பிறந்த நாளினை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிய விவரம்
 
மார்ச் 1-ந் தேதி தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாளாகத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அது, என்னுடைய பிறந்தநாள். உங்கள் பேரன்பு மிகுந்த ஆதரவுடன் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது. இயற்கையின் சதியால் இப்போது தலைவர் கருணாநிதி நம்மிடையே இல்லை.
 
அதனால்தான், பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு ஓரிரு நாட்களுக்கு முன் தி.மு.க.வினருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவதைத் தவிர்த்திடுங்கள்.
 
பேனர்கள் வைக்காதீர்கள். ஆடம்பர விழாக்கள் அவசியமில்லை. மாணவர்களின் பொதுத்தேர்வு நேரம் என்பதால், ஒலிபெருக்கிகள் கட்டாயம் கூடாது.
 
அவற்றிற்குப் பதிலாக, எப்படி ஊராட்சிகள்தோறும் தி.மு.க.வின் இருவண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கிறதோ அதுபோல ‘இளைஞர் எழுச்சி நாள் விழா’ நடத்தப்படும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எங்கெங்கும் கருப்பு சிவப்புக் கொடி பறக்கட்டும்.
 
அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத வகையில் இயன்றவரை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை அளித்திடுங்கள். ஏற்கனவே மாலைகள் சால்வைகளுக்குப் பதில் புத்தகங்களைப் பரிசாக அளிக்க வலியுறுத்தியிருந்தேன்.
 
எனவே மாணவர்களுக்கும் பள்ளி நூலகங்களுக்கும் நல்ல புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள்.
 
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் மொழி, பண்பாடு, உணவுப்பழக்கம் உள்ளிட்ட அனைத்தும் சிதைக்கப்படுகின்றன. தன்னிச்சையான அரசு நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக்கப்படுகின்றன.
 
உள்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வக்கில்லாத ஆட்சியாளர்கள், அர்ப்பணிப்பு மிக்க ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களை அரசியலாக்கி தேர்தல் களத்தில் லாபம் பெற முடியுமா என சூழ்ச்சிக் கணக்குப் போடுகிறார்கள்.
 
எத்தனை தகிடுதத்தங்கள் செய்தாலும் ஜனநாயகப் போர்க்களமான தேர்தல் களத்தில் தீர்ப்பளிக்கப்போகும் பொதுமக்கள் இந்த ஆட்சியாளர்களை இனி எந்நாளும் நம்பப்போவதில்லை. தமிழ்நாடு மிகத்தெளிவான முடிவுடன் தருணம் எப்போது வரும் என்று காத்திருக்கிறது.
 
அது தரப்போகும் தேர்தல் தீர்ப்புதான் இமயம்வரை எதிரொலிக்கப் போகிறது. எதேச்சதிகாரத்தை வீழ்த்திட, பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டை மீட்டிட, 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிட கட்சியினர் அயராது உழைத்திட வேண்டும்.
 
நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும், 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளால் மாநில ஆட்சியும் மாற்றம் காணும். மக்கள் விரும்புகிற அந்த மாற்றத்தை உருவாக்கித் தரவேண்டிய பெரும் பொறுப்பு தி.மு.க.வினரின் கைகளில் இருக்கிறது.
 
ஓயாத உழைப்பும் தளராத உறுதியும் கொண்ட அந்தக் கரங்களால் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளைப் பறித்துத் தாருங்கள்.
 
அதுவே எனக்கு நீங்கள் தருகிற ஒப்பற்ற விலைமதிப்பில்லா பிறந்தநாள் பரிசாக அமையும். நீங்கள் தரப்போகும் அந்தப் பரிசை, அண்ணா நிரந்தரமாகத் துயிலுமிடத்தில், நித்திரை கொண்டிருக்கும் அவரது அன்புத் தம்பியாம் தலைவர் கருணாநிதியின் காலடியில் காணிக்கையாக்கிடுவேன்.
 
அந்தப் பரிசு கிடைக்கும்வரை, நானும் ஓடி, ஓடி உழைத்திடுவேன்; கண்விழித்துக் காத்திருப்பேன். இவ்வாறு அவர் கூறயுள்ளார்
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில் நல்ல உடல்நலம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.