நடிகர் விஜய் தனது சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரிவிலக்குக் கோரிய வழக்கில் நீதிமன்றம் கண்டித்ததையடுத்து, 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளதாக வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து, 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ல்ஸ் கோஸ்ட் வகை சொகுசு காரை இறக்குமதி செய்துள்ளார் நடிகர் விஜய். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மதிப்பில் ஏற்கனவே 20% இறக்குமதி வரி செலுத்திவிட்டதால் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், மனுவை தள்ளுபடி செய்தத்துடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. அந்த அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நடிகர்கள் ரியல் ஹுரோவாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என்றும், சமூக நீதிக்காக பாடுபடுவாதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு என நீதிமன்றம் கடுமையாக சாடியது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், நடிகர் விஜய் தரப்பு காருக்கான நுழைவு வரியைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீக்குவதோடு, நீதிமன்றத்தை அணுகியதற்காக நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும். மேலும் தனி நீதிபதியின் கருத்துகளை நீக்குவது பற்றி நான்கு வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும்” என்று ஜூலை 27 ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நுழைவு வரியாக, 40 லட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளதாக வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், 8 லட்சம் (20%) ரூபாய் செலுத்தி இருந்த விஜய், தற்போது மீதமுள்ள 32 லட்சம் (80%) ரூபாயையும் முழுமையாக செலுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு: சர்ச்சையில் பாலிவுட் சினிமா