90 எம்.எல் படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் நடித்துவிட்டு அதை பெஃமினிசம் என்று சொல்லும் நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்து கடந்த 1ம் தேதி வெளியான படம் 90 எம்.எல். படம் இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டுள்ளததாக பெரும் சர்ச்சைக்குள்ளாகிவருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம், இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணியினர் புகார் மனு அளித்துள்ளனர். அதில், நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த படத்தின் இயக்குனர் மற்றும் ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், குழந்தைகளை சீரழிக்கும் வகையிலும் இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இருக்கிறது என்றும் புகார் மனுவில் கூறியுள்ளனர்.