ஒரு வருடத்துக்கு தான் நடிக்கும் படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் காமெடி நடிகை ஆர்த்தி.

கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக தமிழ் சினிமா துறை முழுமையாக முடங்கி உள்ளது. இந்நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மட்டும் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதிலும் 5 நபர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனால் நஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக பல நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்து வருகின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர்கள் ஹரீஷ் கல்யாண், நந்தா, இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை குறைப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் வாசிக்க: விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து, ‘அருவா’ பட இயக்குனர் ஹரியின் அதிரடி அறிவிப்பு

தற்போது பிரபல காமெடி நடிகை ஆர்த்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு பொதுமக்களுக்கு, ஆனால் சினிமாவையே நம்பி இருக்கும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு இதுதான் வாழ்வாதாரமே. இந்த சினிமா நல்ல இருக்கனும் என்பதற்காகத்தான் விஜய், ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் தொடங்கி ஹரி, நந்தா வரை பலரும் சம்பளத்தை குறைத்துள்ளனர். அதற்கு நன்றி.

பெரிய பிள்ளையார் முன்னாடி ஒரு சின்ன எலி இருப்பது போல.. புரியுது.. நான் எலி இல்லை பெருச்சாளி தான்.. இனிமேல் ஒரு வருஷத்துக்கு நான் நடிக்கும் படங்களில் வாங்கப்போகும்
சம்பளம் வெறும் ஒரு ருபாய் தான்” என கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர் அருள்தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும். எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்.

கொரோனா வைரஸ் காரணமாக வரும் 2020 டிசம்பர் மாதம் வரை சம்பளம் வாங்காமல் நடிக்க இருப்பதாகவும், தன் உழைப்பை முழுமையாக தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அர்ப்பணிப்பேன் என்றும் நடிகர் அருள்தாஸ் கூறியுள்ளார்.