ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் அவர் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். அங்குள்ள ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்தும் சந்திரபாபு நாயுடு, ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார்.
‘தர்ம போராட்ட தீக்ஷா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாநில மந்திரிகள் மற்றும் தெலுங்குதேச எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் பங்கேற்கின்றனர்.
மேலும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகளும் கலந்துகொள்கின்றன. இந்த போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது