திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு கடன் ரத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அறிவித்தார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.

அந்த அறிவிப்பு வெளியாக சில வாரங்களில் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா, புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூ.12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்று அறிவித்தார்.

இந்நிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 19 முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று (பிப்ரவரி 20) பொள்ளாச்சியில் பேசும் போது மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். பொள்ளாச்சி பிரசார கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “இதுவரை 133 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற்றுள்ளேன். 234 தொகுதிகளுக்கு செல்ல நான் முடிவு செய்துள்ளேன்.

நீங்கள் பெட்டியில் போட்டுள்ள மனுக்களுக்கு ரசீதாக ஒரு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டையை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். இன்னும் 3 மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்து விடுவோம். வந்த மறுநாளே இந்த பெட்டிகள் திறக்கப்பட்டு உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

100 நாளில் எல்லா மனுக்களையும் தீர்க்க முடியுமா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் தீர்த்து கொடுப்போம். அப்படி ஏதாவது மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிந்தால் இந்த அட்டையை எடுத்து கொண்டு நீங்கள் கோட்டைக்கு வரலாம். கோட்டைக்கு ஏன் முதல்-அமைச்சர் அறைக்கே வந்து கேட்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே நான் சொன்னேன். தமிழகத்தில் நடக்கும் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று. அது தற்போது நிரூபணமாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மாறாக இதில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேட்டு போய் உள்ளது. தி.மு.க ஆட்சி அமைத்ததும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அது சீரமைக்கப்படும். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டுறவு சங்கங்களில் ஏழை விவசாயிகள் வாங்கிய 5 பவுன் வரையிலான நகைகடனை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தோம். அந்தவகையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ இந்தி பாடப்புத்தகத்தில் காவி உடுத்தி, குடுமி வைத்த திருவள்ளுவர் படம்