உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் மற்றும் குஷிநகர் மாவட்டங்களிலும், உத்தரகாண்டின் ரூர்க்கி மாவட்டத்திலும் விஷ சாராயம் குடித்த 120-க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தீவிர அரசியலில் குதித்த பின் தனது முதல் அரசியல் விமர்சனமாக இந்த கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் விஷ சாராயத்துக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அந்தந்த மாநில பா.ஜனதா அரசுகளே காரணம்.
 
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு போதுமான நிவாரணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்ட பிரியங்கா, முதல் முறையாக 4 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) உத்தரபிரதேசம் செல்கிறார்.
 
லக்னோவில் அவர், தனது சகோதரரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மற்றும், உத்தரபிரதேச மேற்கு பிராந்திய பொறுப்பாளர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் வாகன பேரணியில் கலந்து கொள்கிறார்.
 
மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு பேரணியாக செல்லும் அவர்கள், வழியில் மகாத்மா காந்தி, இந்திரா, ராஜீவ், அம்பேத்கர், படேல் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்த பேரணியில் சுமார் 20 இடங்களில் அவர்களுக்கு காங்கிரசார் வரவேற்பு அளிக்கின்றனர்.
 
இதைத்தொடர்ந்து, நாளை முதல் தனது பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை பிரியங்கா சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். 14-ந்தேதி வரை இந்த சந்திப்புகள் நடக்கிறது.
 
இந்த 3 நாட்களும் காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை பிரியங்கா சந்திக்கிறார். இடையில் மதியம் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை எடுத்துக் கொள்கிறார். மீதமுள்ள சுமார் 13 மணி நேரமும் அவர் கட்சியினரை சந்திப்பதாக உத்தரபிரதேச காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
பிரியங்கா மற்றும் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச காங்கிரசார் மத்தியில் உற்சாகம் கரை புரண்டுள்ளது. இருவரும் செல்லும் இடங்களில் எல்லாம் வாழ்த்து போஸ்டர்களும், பேனர்களும் பளிச்சிடுகின்றன. மேலும் இரு தலைவர்களையும் வரவேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் லக்னோ நோக்கி படையெடுத்துள்ளனர்.
 
ராகுல் மற்றும் பிரியங்காவின் வருகையையொட்டி லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.