மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து அதிமுக எம்பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி குடிநீருக்கும் மின் உற்பத்திக்கும் பயன்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
 
இதை கண்டித்து தமிழக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளி காரணமாக மக்களவையும் மாநிலங்களவையும் அவ்வப்போது முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி சிலை முன்பு அதிமுக எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தொடர் அமளியில் ஈடுபட்டதால் தம்பிதுரை, வேணுகோபாலை தவிர மற்ற அதிமுகம் எம்பிக்கள் 26 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
மக்களவையின் 374ஏ விதிமுறைப்படி 26 எம்பிக்களை 5 அமர்வுகளில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
 
அதிமுக எம்பிக்களான சந்திகாசி, பாரதிமோகன்,ஜெயவர்தன், பரசுராமன், கே. காமராஜ் உள்ளிட்ட 26 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
மாநிலங்களவையில் இருந்து அதிமுக, திமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
 
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக ஒரு நாள் மட்டும் எம்பிக்கள் 11 பேர் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்பிக்கள் 11 பேரும், திமுக எம்பிக்கள் 4 பேரும் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
திமுக எம்பிக்கள் கனிமொழி,திருச்சி சிவா உள்ளிட்டோர் அவை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக எம்பிக்களான நவநீதகிருஷ்ணன், மைத்ரேயன், விஜிலா சத்யானாந்தா, எஸ்ஆர் பாலசுப்பிரமணியன், எஸ் முத்துக்கருப்பன், ஏகே செல்வராஜ், எ விஜயகுமார், ஆர் லக்ஷ்மணன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.