சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
 
அதனை தொடர்ந்து அவரது இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்காக வருவாய் துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்ட போது எதிர்ப்புகள் அதிக அளவில் கிளம்பியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
 
இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
 
தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில் இந்த கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது .
 
குறிப்பாக இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் போயஸ் தோட்டபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 
அவர்கள் ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் எங்களுக்கு பல இடையூறுகள் இருந்தது. என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். தற்போது நினைவு இல்லமாக அமைக்கும் போது மேலும் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
குறிப்பாக இந்த போயஸ் தோட்டத்திற்கு செல்லும் பாதை என்பது ஒருவழி பாதையாக தான் உள்ளது. நினைவிடமாக அமைக்கப்பட்டால் அதிகப்படியான பொதுமக்கள், பல்வேறு வாகனங்கள் வரக்கூடும்.
 
வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும். மேலும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட செல்ல முடியாத ஒரு சூழல் நிலவக்கூடம் என்ற எதிர்ப்பு நிலையில் பேசினார்.
 
ஏற்கனவே கடந்த டிசம்பர் 8ம் தேதி சமூகப்பணி கல்லூரி மூலம் கருத்து கேட்பு கூட்டமானது நடைபெற்றது. அப்போது கலந்துகொண்ட பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்புகளையே தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்திலும் மக்கள் எதிர்ப்புகளையே தெரிவித்துள்ளனர்.