இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை போட்டி நடத்தியதால், ஏற்பட்ட வரி இழப்பை ஈடுகட்ட ரூ.161 கோடி தருமாறு, பிசிசிஐ-யிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரியுள்ளது.
 
2016-ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. அப்போது, போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வரிச்சலுகைகள் ஏதும் அளிக்கப்படவில்லை.
 
இதனால், போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகளை பெற்ற ஸ்டார் நிறுவனம், வரிகள் அனைத்தையும் கழித்துக் கொண்டு மீதித்தொகையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இடம் வழங்கியுள்ளது.
 
இதனால், பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டதாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதைக் கட்ட வேண்டும் எனவும் ஐசிசி கூறியுள்ளது.
 
இதற்க்காக மொத்தம் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 161 கோடியைத் தர வேண்டும். தவறினால் நடப்பு நிதியாண்டுக்கான வருவாயில் இந்தியாவின் பங்கில் இருந்து இழப்பீட்டுத்தொகை கழித்துக்கொள்ளப்படும் என ஐசிசி திட்டவட்ட்மாக தெரிவித்து உள்ளது .

 

அத்தோடு விடாமல், இந்தியாவில் நடைபெற உள்ள 2021 சாம்பியன்ஸ் டிராஃபி மற்றும் 2023 ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடர்களை வேறுநாடுகளில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஐசிசி எச்சரித்துள்ளது.
 
ஐசிசி தலைவராக சசாங் மனோகர் உள்ள நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பிசிசிஐக்கு நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
 
ஒருவேளை, இந்தியாவின் வருவாய் பணத்தில் ஐசிசி கைவைத்தால் சட்டரீதியிலான நடவடிக்கையில் இறங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .