இந்தியர்கள் இடையே தற்போது வைரலாக பரவி வரும் ஜூம் (Zoom) செயலி பாதுகாப்பானது கிடையாது, அதில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

இந்தியா முழுக்க கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அலுவலக வேலைகள் முதல் பள்ளிகள் பாடம் நடத்துவது என அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ஜூம் செயலி அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்கிறது ஜூம் செயலி. இதில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை வீடியோ சந்திப்புகள் செய்ய முடியும்.

‘எரிக் யுவான்’ எனும் சீன அமெரிக்கர் 2011-ம் ஆண்டில், ஜூம் சேவையை தொடங்கி, இச்செயலி, 2013-ம் ஆண்டு முதல் வீடியோ சந்திப்பு சேவையை வழங்கி வருகிறது. ஏற்கெனவே தொழில்முறை பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருந்தது. கரோனா சூழலில் வீடியோ சந்திப்பு வசதியை நாடுபவர்கள் மத்தியிலும் தற்போது பிரபலமாகி வருகிறது.

இந்த செயலியை கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஒரு கோடி பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இதன் பயன்பாடு 20 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தனது சேவையை வாரிவழங்கினாலும் இதில் தனிநபர் விபரங்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுக்க இந்த செயலியை பயன்படுத்தியவர்களில் 60 ஆயிரம் கணக்குகள் வரை ஹேக் செய்யப்பட்டு, தரவுகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாகவும், மக்களின் வீடியோ அழைப்புகள் ஆன்லைனில் கசிந்து வருவதாகவும், மேக் மற்றும் விண்டோஸ் நிறுவனங்கள் தங்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளன.

எரிக் யுவான், ஜூம் தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். ஜூம் பாமிங் பிரச்சினையைப் பொறுத்தவரை, ஸ்கிரின்ஷேரிங்கை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வழிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 90 நாட்களுக்கு புதிய அம்சங்கள் அறிமுகத்தை நிறுத்தி வைத்து தனிநபர் விபரங்கள் பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளது.

இதையடுத்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் பள்ளிகள் மூலம் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் இந்த செயலியை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்தது. அதேபோல் உலகம் முழுக்க பல ஐடி நிறுவனங்கள் இந்த செயலியை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டது.

ஏற்கனவே மத்திய அரசின் ”இந்தியாவின் கணினி அவசரகால பதில் குழு” (India’s Computer Emergency Response Team-CERT-IN) ஜூம் செயலியின் மூலம் சைபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது. உங்களின் கணக்குகள், முக்கியமான விவரங்கள் திருடப்படலாம் என்று அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூம் செயலி பாதுகாப்பானது கிடையாது, அதில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

தற்போதுள்ள சூழலில் நீங்கள் எந்த செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும், அதில் குறிப்பிட்டுள்ள தனிநபர் பாதுகாப்பு தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள், உங்களுக்கு உகந்ததாக இல்லாத நிலையில் அந்த செயலியை தவிர்ப்பதே நல்லது என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.