பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதன்முறையாக ஒரு வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

2020 ஜனவரி மாதம் வெளியான ‘எம்டிவி நிஷேத்’ தொடர், நோய், பாலியல், கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்தத் தொடரின் அடுத்த பகுதி ‘எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ளது. காசநோய் குறித்த விழிப்புணர்வு இந்தத் தொடரின் மையமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்தத் தொடரின் மூலம் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதன்முறையாக நடிகையாக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து சானியா மிர்ஸா கூறுகையில், “நம் நாட்டில் இருக்கும் நீடித்த நோய்களில் ஒன்று காசநோய். காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களாக இருக்கின்றனர். அதைச் சுற்றியுள்ள தவறான கருத்துகளை மாற்றுவது மிகவும் அவசரத் தேவையாக உள்ளது.

அதனை ‘எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்’ தொடர் அழுத்தமாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சொல்கிறது. நம் நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவரும் இந்தக் காசநோய் தற்போது கொரோனாவால் இன்னும் மோசமடைந்துள்ளது.

செல்வாக்குமிக்க இடத்தில் இருக்கும் ஒருவர் என்ற வகையில், மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு எனது இருப்பு ஒருவிதத்தில் உதவும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐந்து எபிசோட் கொண்ட இத்தொடர் நவம்பர் கடைசி வாரத்தில் எம்டிவி இந்தியா மற்றும் எம்டிவி நிஷேத் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது OTT தளங்கள்