குஜராத்தில் 2 மூத்த அதிகாரிகள் மீது 25 பெண் ஊர்க்காவல் படையினர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
குஜராத்தில் சூரத் நகரில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 25 பெண்கள் நகர காவல் ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்துள்ளனர். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உள்ளூர் புகார் குழு அவர்களது புகாரை விசாரித்து வருகிறது.
அதில், 2 மூத்த அதிகாரிகள் மீது அவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர். 4 பக்கம் கொண்ட புகாரில், மனதளவில், உடலளவில், பாலியல் ரீதியில் இருவரும் பெண்களிடம் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர். விருப்பப்பட்ட பணியிடங்களுக்கு செல்ல அவர்கள் பணம் கேட்டுள்ளனர். பணம் தரவில்லை என்றால், தொலைவில் உள்ள இடங்களுக்கு அனுப்பப்பட்டு துன்புறுத்தல் தரப்பட்டு உள்ளது.
அந்த 2 பேரில் ஒருவர், புகார் அளித்த பெண்களின் சீருடையினை சரி செய்வது போன்று தவறான முறையில் தொட்டுள்ளார்.
பெண்களில் சிலர் அதிகாரிகளின் வீட்டு பணியாளாகவும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி முதல் மந்திரி விஜய் ரூபானிக்கும் புகார் அளித்துள்ளனர்.