தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் சென்னை ரங்கநாதன் தெருவில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுவதாக, தியாகராய நகர் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். பிரபல ஜவுக்கடைகள் நிறைந்திருக்கும் ரங்கநாதன் தெருவில், கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், திருட்டு போன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, தியாகராய நகர் வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பாதுகாப்பு மற்றும் சிசிடிவி மூலம் நடைபெறும் கண்காணிப்பு பணிகளை போலீசாரிடம் கேட்டறிந்தார். பேஸ் டிடெக்டிவ் கேமராக்கள் மூலம், தியாகராய நகர் முழுவதும் கண்காணிப்பு பணி நடைபெறுவதாக தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜவுளிக்கடைகள் அதிகம் நிறைந்த சென்னை தியாகராய நகரில், பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் அதிகம் இயங்குவதால், எப்போதும் கூட்டமாகவே காணப்படும் நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கொள்ளையர்களை கண்காணிக்கவும், வாடிக்கையாளர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ரங்கநாதன் தெரு சந்திப்பு, போத்திஸ் ஜவுளிக்கடை, உஸ்மான் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தியாகராய நகர் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.