சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களில் 83 விழுக்காடு உயர்சாதியினர் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி, தொழில், அரசு நிறுவனங்களில் பணிகள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டமாக இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இந்தியா முழுவதும் அரசு நிறுவன பணிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்திய கல்வி நிறுவனங்களிலேயே தலை சிறந்ததாக கூறப்படும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) ஆகியவற்றில் மட்டும் இடஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்று தொடர்ந்து பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக பாஜக ஆட்சி அமைத்த பிறகு இடஒதுக்கீடை மீறி உயர்சாதியினருக்கு மட்டுமே இந்த நிறுவனங்களில் பேராசிரியர் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒன்றிய அரசோ, ஐஐடி நிர்வாகமோ இதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வருகின்றன.
இதன் காரணமாக ஐஐடி வளாகங்களில் சாதி, மத ஒடுக்குமுறைகள் நிகழ்வதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களும் ஐஐடி வளாகங்களில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததால் இவற்றில் உயர்சாதியினர் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக சென்னை ஐஐடியில் சாதி ஒடுக்குறை அதிகம் இருப்பதாக அங்கு பணிபுரிந்த கேரளாவை சேர்ந்த உதவி பேராசிரியர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதேபோல் கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா மர்மமான முறையில் உயிரிழந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அங்கு பணிபுரிந்த பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி தனது செல்போனில் எழுதி இருந்த படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் எந்த சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அதிகளவில் பணிபுரிகிறார்கள் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இளைய தலைமுறை என்ற அமைப்பு விண்ணப்பித்து இருந்தது. இந்த கடிதத்துக்கு கிடைத்த பதிலை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி ஐஐடி சென்னையில் மொத்தம் 619 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 514 பேர் உயர்சாதி வகுப்பினராக இருந்து வருகிறார்கள். அதாவது சென்னை ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர்கள் 83 விழுக்காடு உயர்சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே. இதில், 70 பேர் (11.30%) மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
பட்டியலினத்தை பொறுத்தவரை 619 பேராசிரியர்களில் 27 பேர், அதாவது 4.30 சதவீதம் மட்டுமே உள்ளனர். அதேபோல் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த 8 பேர் மட்டுமே சென்னை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் சதவீதம் வெறும் 1.30% மட்டுமேயாகும். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி விவாதப் பொருளாக மாறியுள்ளன.
இதனை சுட்டிக்காட்டி இளையதலைமுறை அமைப்பு விமர்சித்துள்ளது. அதில், “இளையதலைமுறை சார்பாக 29/11/2022 அன்று பெறப்பட்ட RTI தகவலின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஐஐடி சென்னயில் பணிபுரியும் பேராசிரியர்களில் 83% உயர்சாதிகள். என்ன கொடுமை இது? இவர்களுக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீடு என்பது OBC, SC, ST மக்களுக்கு செய்யும் அநீதி” என்று கூறியுள்ளது.