ரூ.20,000 கோடி மதிப்பீட்டிலான மும்பை – தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கான ஏலத்தை அதானி குழுமம் கைப்பற்றி உள்ளதாக மகாராஷ்டிரா மாநில குடிசை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் மறுசீரமைப்பு பணிகள் தாராவியின் அடையாளத்தை அழித்துவிடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றாக மும்பை தாராவி விளங்குகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 259 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது தாராவி. தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குடிசைப் பகுதியில் உள்ள வீடுகள் புறாக்கூண்டுகளை போல சிறிது சிறிதாக இருக்கும்.

சுமார் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் தாராவியில், ஒரு வீட்டில் பல அறைகளை உருவாக்கி மக்கள் மிகவும் நெருக்கமாக வசித்து வருகின்றனர். மும்பைக்கு பிழைப்பு தேடி வருபவர்களுக்கு தாராவி தான் சொர்க்கப்பூமி என்று சொல்லலாம்.

தாராவியில் உள்ள இந்தக் குடிசைகளை மேம்படுத்தும் திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. கடந்த பாஜக ஆட்சியில் தாராவி மறுசீரமைப்பு திட்டம் தொடங்கப்பட்டு, கடைசி நேரத்தில் துபாய் நிறுவனத்துக்கு வழங்கிய மறுசீரமைப்பு திட்டப்பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தாராவி சீரமைப்பு திட்டப்பணிகள் முடங்கியது.

பின்னர் ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு, தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்காக ரயில்வே நிர்வாகம் நிலத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டியது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்றது. அடுத்த சில நாட்களில் தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு ரயில்வே நிலத்தை ஒப்படைத்தது.

இந்நிலையில் ரூ.20,000 கோடியில் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவேற்ற மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதன்ஒருபகுதியாக கடந்த அக்டோபர் மாதம் தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டது. இந்த முறை டெண்டரில் 8 நிறுவனங்கள் கலந்துகொண்டன. அவற்றில் அதானி, டிஎல்எஃப் உட்பட 3 நிறுவனங்கள் மட்டும் இறுதியாகத் தேர்வுசெய்யப்பட்டன.

20,000 கோடி மதிப்பீட்டில் 259 ஹெக்டேர் பரப்புகொண்ட தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனம் குறைந்தபட்சமாக 1,600 கோடி ஆரம்பகட்ட முதலீடாகப் போட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது மாநில அரசு.

இதில் அதானி நிறுவனம் ரூ.5,069 கோடி முதலீடு செய்வதாகத் தெரிவித்திருந்தது. டிஎல்எஃப் நிறுவனம் ஆரம்பகட்ட முதலீடாக 2,026 கோடி முதலீடு செய்யப்படும் என்று டெண்டரில் குறிப்பிட்டிருந்ததாதாக தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறுகையில், “தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அதானி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. டெண்டர் விவரம் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசு 2 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கும்.

2.5 சதுர கிலோமீட்டரில் இருக்கும் 60 ஆயிரம் குடிசைவாசிகள், 13 ஆயிரம் கடைகள், வணிக நிறுவனங்கள் இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் அதானி நிறுவனம் இலவச அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுக்கும். குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தது போக எஞ்சி இருக்கும் நிலத்தில் அதானி நிறுவனம் வீடுகள் மற்றும் கடைகளைக் கட்டி விற்பனை செய்துகொள்ளும்.

அதானி நிறுவனம் இந்தத் திட்டத்துக்காக மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கும். அதில் மாநில அரசுக்கு 20% பங்கும், அதானி நிறுவனத்துக்கு 80% பங்கும் இருக்கும். பணி ஆர்டர் கிடைக்கப்பட்டதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் பணிகளை முடித்துக்கொடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடிசைவாசிக்கும் 405 சதுர அடியில் வீடு கட்டிக் கொடுக்கப்படும். அதானி நிறுவனம் இலவச வீடுகள் பெறத் தகுதியானவர்கள் தொடர்பாகப் புதிய கணக்கெடுப்பு நடத்தும். இலவச வீடு பெறத் தகுதியில்லாதவர்கள் நிலம், கட்டுமான செலவைக் கொடுத்து வீடு பெற்றுக்கொள்ள வேண்டும்.

முதற்கட்டமாக குடிசைவாசிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரயில்வே நிர்வாகத்திடம் கணிசமான நிலம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அதானி நிறுவனத்துக்கு மாநில அரசு பல்வேறு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தாராவி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இங்குள்ள ஏராளமான சிறுதொழில்கள் அழிய வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது ஒரு வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் கூட வசிப்பதால், அவர்கள் அனைவருக்கும் மறுசீரமைப்பு திட்டத்தில் வீடு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒருவேளை வசிப்பவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்காவிட்டால் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் நிலைமை ஏற்படும் என்று மக்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் தாராவி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடம் என்பதால், இது சர்வதேச அடையாளத்தை இழக்கும் என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.