44வது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் படங்கள் இடம் பெற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

44-வது போட்டி செஸ் ஒலிம்பியாட், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (28.07.2022) முதல் ஆகஸ்ட். 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த போட்டியில், உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

மேலும் எங்கு திரும்பினாலும், இந்த போட்டியின் லோகோவான வேட்டி-சட்டையுடன் கூடிய செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் குதிரை காய் வணக்கம் தெரிவிப்பதுபோல, தம்பி சின்னங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறவில்லை என பாஜகவினர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். விளம்பர பதாகைகளில் பாஜகவினர் மோடியின் படத்தினை தாங்களாகவே ஒட்டினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசாரார் மோடியின் படத்தின் மீது கருப்பு வண்ணம் பூசி அவர் முகத்தை மறைத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து விளம்ரங்களிலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பாஜக சார்பில் ராஜேஷ் கண்ணா என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது.

ஆனால் ஆளும் கட்சி இதனை தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டது. இதற்காக இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் அணில் காணொலி வழியாக ஆஜராகி, பிரதமரின் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு தமிழக அரசுத் தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் குடியரசுத் தலைவர் புகைப்படம் இடம்பெறவில்லை. பிரதமரின் வருகை ஜூலை 22-ல் தான் உறுதியானது. இதனால் முன் விளம்பரங்களில் இருவரின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கெல்லாம் பெருமை. ஒவ்வொருவரும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இதில் சிறு சிறு செய்திகளை பெரிய பிரச்சினையாக ஆக்குவது தவறு. மனுதாரர் தமிழ்நாடு அரசிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாட்டை முன்னிலைபடுத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது.

இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்தை சேர்க்கக்கோரிய வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த மனு விசாரணை மீண்டும் வந்தபோது, செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்ரபத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

குடியரசுத் தலைவர், பிரதமர் புகைப்பட விளம்பரங்கள் சேதப்படுத்தாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத்தர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.