டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு
மன்னிப்பு கேட்காவிட்டால் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் நிறுத்தப்படும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 2020 ஆம் ஆண்டு நடக்க இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், இதுவரை கவுன்சிலிங் நடத்தப்படாமல் இடங்கள் ஒதுக்கப்படாமல் உள்ளது.
அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராகப் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நீட் கவுன்சிலிங் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நீட் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த திங்களன்று (27.12.2021) கவுன்சிலிங்கை உடனடியாக நடத்தக் கோரி மௌலானா ஆசாத் கல்லூரியிலிருந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கி மருத்துவர்கள் ஊர்வலம் சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இருப்பினும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் மருத்துவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியதில் பயிற்சி மருத்துவர்கள் காயமடைந்தனர்.
அதேபோல் சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, காவல்துறையினர் 7 பேர் காயம் அடைந்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 12 பயிற்சி மருத்துவர்கள் மீது பணியில் இருக்கும் அதிகாரியை கடமையை செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 12 மருத்துவர்களையும் விடுவிக்கக் கோரி இரவு கடும் பணியிலும் மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு, டெல்லி எம்ய்ஸ் மருத்துவர்கள் சங்கம், குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
24 மணி நேரத்தில் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்காவிட்டால் அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்தது. அதேபோல் பயிற்சி மருத்துவர்கள் மீதான தாக்குதல், மருத்துவ சேவை வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று டெல்லி குடியுரிமை மருத்தவர்கள் சங்கம் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சி மருத்துவர்கள் பிரதிநிதிகளை சந்தித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, “இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் ஜனவரி 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அதற்கு முன்னதாக ஒன்றிய அரசு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிடும். ஆகையால் விரைவில் கலந்தாய்வு தொடங்கும் என நம்புகிறேன். என மருத்துவர்கள் டெல்லியில் உள்ள கொரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
ஏற்கெனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ரெஸிடென்ட் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவிந்த் பல்லவ் பந்த் மருத்துவமனையில் நேற்று மதியம் வரை புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லை.
அதேபோல் லேடி ஹர்டிங்கே மருத்துவக் கல்லூரி, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, பாபா சாஹிப் அம்பேத்கர் மருத்துவமனையிலும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் கவுன்சிலிங் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்குவர உள்ள நிலையில், ஒன்றிய அரசே பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட காரணமாக உள்ளதாக என பாதிக்கப்படும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.