அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘தி மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’ அமைப்பு, 1950-ல் அன்னை தெரசாவால் தொடங்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அவர், மசிடோனியாவை விட்டு, இந்தியாவில் குடியேறினார்.

உலகின் ஆகச் சிறந்த கத்தோலிக்க சேவை அமைப்புகளில் அன்னை தெரசா நிறுவிய ‘தி மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’ அமைப்பும் ஒன்று. 1979 ஆம் ஆண்டு அவரது மனிதாபிமான பணிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிககளைக் கொண்டுள்ள ‘தி மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’ என்கிற அமைப்பு, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பராமரிப்பு இல்லங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மிக மோசமான உடல் நலம் கொண்டோரைப் பராமரிக்கும் இல்லம் போன்றவைகளை நிர்வகித்து வருகிறது.

நீண்ட காலமாகவே இந்து அமைப்பினர், இதுபோன்ற அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இந்து அமைப்பினர் நாட்டின் சில பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகளை செய்தனர். வட இந்தியாவில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை சேதப்படுத்தினர்

இந்நிலையில் எதிர்மறையான தகவல்கள் வருவதால் அவ்வமைப்பின் பதிவைப் புதுப்பிக்கவில்லை என மோடி அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கிறிஸ்துமஸ் அன்று அறிவித்தது.

இதுகுறித்து ‘தி மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’ அமைப்பு 27.12.2021 அன்று வெளியிட அறிவிப்பில், வெளிநாட்டு நிதிகளைப் பெறும் உரிமத்தை நீட்டிப்பதற்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்னை தீரும் வரை எந்தவித வெளிநாட்டு கணக்குகளையும் தங்கள் அமைப்பு கையாளாது எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து ‘தி மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’ அமைப்பின் வங்கிக் கணக்குகளை ஒன்றிய பாஜக அரசு முடக்கி உள்ளதாகவும், இதனால் அங்குள்ள 22,000 நோயாளிகள், ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், “கிறிஸ்துமஸ் அன்று, ஒன்றிய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது.

அவர்களின் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருகின்றனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் FCRA 2010 மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011 இன் கீழ் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் டிசம்பர் 25 அன்று நிராகரிக்கப்பட்டது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தகவலின்படி, மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி வங்கியின் கணக்குகளை முடக்குமாறு எழுத்துபூர்வமான எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை எனக் கூறியுள்ளது. இருப்பினும் விண்ணப்பம் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி வங்கியின் கணக்குகள் 1.1.2022 முதல் சட்டப்படி முடக்கப்படும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு, இந்தியாவில் செயல்பட்டு வரும் சேவை அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி மற்றும் நன்கொடைகள் தொடர்பாக நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகளால் கிரீன்பீஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் அன்னை தெரசா நிறுவிய தி மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.