விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடு விதித்துள்ள மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல, கொரோனாவுக்கு தான் எதிரானது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் அடுத்தடுத்து நாட்களில் வரும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் விழாக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு, ஊர்வலம் நடத்த தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அதேபோல் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு, உத்தவ் தாக்கரே அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாகத் தொற்று சற்று அதிகரித்துள்ளது. எனவே கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது அலை வரக்கூடும் என ஒன்றிய அரசும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுக்கு ஒன்றிய அரசு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது.

இதனால் உறியடி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவலைப் பற்றிக் கவலைப்படாமல் அரசைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்துகிறது. அவர்கள் எங்களை இந்து விரோதிகள், இந்துக்களை எதிர்க்கும் அரசு என்று அழைக்கிறார்கள்.

இந்த அரசு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. ஆனால் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரானது. நீங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவி செய்யுங்கள். வீதிகளில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். மேலும் ஒன்றிய அரசு தான் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது. அந்த கடிதத்தைக் உங்களுக்கு காட்டவேண்டுமா?” என பதிலடி கொடுத்துள்ளார்.

ரூ.900 கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை; 2 வாரங்களில் 2 முறை உயர்வு