கதி சக்தி திட்டத்தின் மூலம் ரூ.100 லட்சம் கோடியில் தொழில்கள் உருவாக்கப்பட்டு, ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மிகப்பெரிய வளர்ச்சியை நாம் அடைவோம் என டெல்லியில் நடைபெற்ற 75வது சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர், செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தேசியக் கொடி ஏற்றும் போது முதல் முறையாக விமான படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் துவப்பட்டன.

பிரதமர் மோடி தனது உரையில், “இந்த சுதந்திர தின விழாவில் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அனைவரையும் நினைவு கூர்கிறேன். சுதந்திரம் பெற்ற போது நாட்டில் ஏற்பட்ட வேதனை சம்பவங்களை இன்றும் உணர்கிறேன்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா என்பது வெறும் விழாவாக மட்டும் இருந்து விடக்கூடாது. நாம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான புதிய திட்டங்களை நோக்கி வெற்றி நடைபோட வேண்டும்.

நாட்டில் வலிமையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவின் 100வது சுதந்திர தின விழாவின் போது இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று சுயசார்புடைய நாடாக இருக்க வேண்டும். அனைவரின் ஆதரவு, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற 3 தாரக மந்திரத்தை கொண்டு நமது இலக்கை நிறைவேற்றுவோம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாம் உலகின் முன்னணி வரிசையில் இருக்கிறோம். உலகில் பெரிய அளவில் நாம் தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இதுவரை 54 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

உலகில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிய போதே நாமும் தடுப்பூசியை தயாரித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள், மருந்துகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் வணங்கத்தக்கவர்கள்.

ஒலிம்பிக் வீரர்கள் இன்று இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்தியா ஒலிம்பிக் போட்டியில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. தடகள போட்டியில் வரலாற்று சாதனை உருவாக்கப்பட்டு இருக்கிறது. நமது வீரர்கள் வெளிப்படுத்திய திறமை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே 4.5 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம்.

மக்களுக்கு தரமான, சத்தான உணவுப் பொருட்கள் ரே‌ஷன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை குழந்தைகள் ஊட்டச்சத்து பெறுவதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம்.

கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு ரே‌ஷனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஏழைகளுக்கும் சத்தான உணவு கிடைக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்குள் செறிவூட்டப்பட்ட சத்தான அரிசி ரே‌ஷனில் வழங்கப்படும்.

[su_image_carousel source=”media: 25655,25654″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

நாடு முழுவதும் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சி ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்து இருக்கிறோம்.

அரசின் திட்டங்கள் ஒரு சிலரை சென்றடையாமல் இருந்த நிலை இப்போது இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள தடைகளை தாண்டி செல்லும் வகையில் மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கப் போகிறோம்.

வரப்போகிற காலங்களில் நம் நாடு தொழில்துறையில் உலக அளவில் போட்டியிட உதவும் வகையில் ‘கதி சக்தி’ என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியை வேகமடையச் செய்வதே கதி சக்தி திட்டம் ஆகும்.

கதி சக்தி திட்டத்தின் மூலம் ரூ.100 லட்சம் கோடியில் தொழில்கள் உருவாகும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மிகப்பெரிய வளர்ச்சியை நாம் அடைவோம். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் இனி போட்டிபோடும். எனவே இந்தியா எதிர்கால பொருளாதார சிறப்பு மண்டலமாக மாறும்.

இந்தியாவில் தற்போது போர் விமானங்களையும் தயாரித்து வருகிறோம். நமது தொழில் துறை உற்பத்தி உலக சந்தையுடன் போட்டியிட வேண்டும். அதற்கு நமது தயாரிப்பு தரமானதாக இருக்க வேண்டும். அதில் தான் நமது பெருமை உள்ளது. எனவே தரமான தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மின் இணைப்பு, சமையல் கேஸ், ஓய்வூதியம் போன்றவற்றை நாட்டின் கடைகோடி மக்களுக்கு சேர்த்து இருக்கிறோம். வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா, சாகச சுற்றுலா, பனை மரத்தோப்பு அமைப்பதில் தனி கவனம் செலுத்தப்படும். சாதாரண ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆரோக்கியம் அளிப்பது தான் அரசின் முக்கிய பணியாக கருதுகிறோம். ‘மக்கள் மருந்தகம்’ மூலம் தரமான மருந்துகள் மலிவான விலையில் இப்போது வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டின் 110 பின்தங்கிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தப்படுகிறது. 100% கிராமங்களிலும் சாலை வசதி, 100% மக்களுக்கும் வங்கிக்கணக்கு என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்.

இன்று கிராமத்தில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். நாட்டுக்குள்ளும், வெளிநாட்டிலும் மிகப்பெரிய சந்தையை உருவாக்க டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவி செய்துள்ளது.

காஷ்மீரில் தற்போது வளர்ச்சி நன்றாக தெரிகிறது. விரைவில் தொகுதி வரையறை செய்யப்பட்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள். தானியங்கள் உற்பத்தி, காய்கறி உற்பத்தி போன்றவற்றில் நமது விஞ்ஞானிகளின் உதவிகள் கிடைத்து வருகிறது. ஆழ்கடல் பரிசோதனை மூலம் புதிய வளங்களை கண்டறிய முயற்சி நடக்கிறது.

நாட்டின் பெருமைமிகு சின்னமாக விவசாயிகள் வர வேண்டும். இந்தியாவில் 80 சதவீத விவசாயிகள் 2 ஹெக்டேர் நிலத்துக்கும் குறைவாகவே வைத்து இருக்கிறார்கள். சிறு விவசாயிகளை மனதில் கொண்டு திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

விவசாயிகள் வங்கிகளில் கடன் கிடைக்க எளிமையான செயல்பாடுகளை உருவாக்கி உள்ளோம். வட்டார அளவில் தானிய கிடங்குகள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்பிரிவு ஏழைகள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடுகளை அமல்படுத்தி இருக்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் விரைவில் ரெயில்வே மூலம் இணைக்கப்படும். அத்துடன் அருகில் உள்ள வங்காளதேசம், மியான்மர், தெற்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே ரெயில்வே இணைப்புகள் உருவாக்கப்படும்.

‘வந்தே பாரத்’ ரெயில் மூலம் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஒன்றிணைக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உருவாக்குவதில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.

பெண்களுக்கு பிரத்யேகமாக ராணுவ பள்ளிகளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை வறுமையை ஒழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பது ஊக்குவிக்கப்படுகிறது.

மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றதாக மாறும் என்பதற்கு உத்தரவாதத்தை தருகிறோம். இதற்கு ஹைட்ரஜன் சக்தி முழுமையாக பயன்படுத்தப்படும். இதற்காக ‘தேசிய ஹைட்ரஜன் மி‌ஷன்’ திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன் மூலமாக மின் உற்பத்தியில் முழு தன்னிறைவு கிடைக்கும்.

தற்போது கொரோனா காலமாக இருந்தாலும் கூட வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் குவிந்துள்ளன. அன்னிய செலாவணி உயர்ந்துள்ளது.

பயங்கரவாதம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதை முறியடித்து வருகிறோம். நமது இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நமது இலக்கை எட்டுவதற்கு கடுமையாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை 2021: பிரதமர் மோடி பெருமிதம்