இந்திய விமான நிலைய ஆணைய ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் ஆதியோகி சிலை இடம்பெற்றதற்கு எழுந்த கண்டனங்களை அடுத்து, 5 மணி நேரத்தில் நீக்கப்பட்டு உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்தே வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம், மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பக்கத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் ஆதியோகி சிலையின் படம் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. ஆனால் ஜக்கி வாசுதேவின் ஆதியோகி சிலையை தமிழ்நாட்டின் அடையாளமாக காட்டுவது, இந்தியைத் திணிப்பதைப் போல் தமிழ்நாட்டின் அடையாளத்தையும் மாற்ற முயற்சிக்கும் செயல் என அரசியல் கட்சியினர் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், ஆதியோகி சிலையை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆவணத்தை வெளியிட்ட 5 மணி நேரத்தில் அதனை நீக்கிவிட்டு, உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை பயன்படுத்தி இருந்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதனை நீக்கி உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது. அதை வரவேற்கிறேன்.
இனி தவறியும் இது போன்ற தவறினை இழைக்காதீர்கள். @AAI_Official pic.twitter.com/fwFIroUp9U
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 13, 2021
கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள்; உ.பி., பீகார் மாநிலங்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்