எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளாக இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகாததால், ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இப்படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010 ஆம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996 ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் இதழில் ஜூகிபா என்ற கதை எழுதினார். அதே கதையை திக் திக் தீபிகா என்ற தலைப்பில் நாவலும் எழுதி 2007 ஆம் ஆண்டு வெளியிட்டார். இக்கதையை தான் இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாக கூறி, ஆரூர் தமிழ்நாடன் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை காவல்துறை ஏற்காததால், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக குற்ற வழக்கை ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஷங்கர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை ஷங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
ஷங்கர் சினிமா பிரபலமாக உள்ளதால் நீதிமன்றத்துக்கு வந்தால் கூட்டம் கூடி, விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், தேவைப்படும்போது ஆஜராகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எழும்பூர் 2வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன்பு ஆரூர் தமிழ்நாடான் தொடர்ந்த வழக்கு ஜனவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது இயக்குனர் ஷங்கரோ அல்லது அவர் சார்பில் வழக்கறிஞரோ ஆஜராகவில்லை. இதையடுத்து, இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் புகார் தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற ‘வாய்தா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு