மத்திய அரசின் எந்தவொரு பரிந்துரையையும் ஏற்கமாட்டோம், வேளாண் சட்டங்களை நிபந்தனை இன்றி முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பது தான் ஒரே கோரிக்கை என விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 58 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
விவசாயிகளை போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா அன்று 1 லட்சம் டிராக்டர்கள் பேரணியை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இதனையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனக் கூறி வந்த மத்திய அரசு, நேற்று (ஜனவரி 20) விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒன்றரை ஆண்டுகள் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று (ஜனவரி 21) போராடும் விவசயிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்குவது, போராடுபவர்கள் மீது NIA பதிவு செய்துள்ள வழக்குகளை நீக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்பின்னர் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில், “மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் வரை எந்தவிதமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என முடிவு செய்துள்ளோம். நாளை (ஜனவரி 21) மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போதும் இதனையே வலியுறுத்துவோம்.
எங்களுடைய ஒரே கோரிக்கை 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது தான் எனக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
இதற்கிடையில், குடியரசு தின விழா அன்று டெல்லி புறவழிச் சாலையில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் அமைப்பிற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், நாங்கள் அந்த வழியில் மட்டுமே டிராக்டர் பேரணி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த 10வது கட்ட பேச்சுவார்த்தை