மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் அளிக்கத் தொலைபேசி எண்களை சிபிசிஐடி அறிவித்துள்ளது. 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவங்கர் பாபாவை, சிபிசிஐடி காவல்துறையினர் 16-06-2021 அன்று டெல்லியில் கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், பாலியல் புகார் தொடர்பாக 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு போக்சோ மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் தனக்கு ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா மனு அளித்திருந்தார்.

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவரை வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தன்னை கடவுளாக சித்தரித்துக் கொண்டு ஏமாற்றிய சாமியார்கள் பலர் சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர்.

அந்த வரிசையில் சிவசங்கர் பாபாவும் தற்போது பாலியல் புகாரில் சிக்கி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் அளிக்கத் தொலைபேசி எண்களை சிபிசிஐடி அறிவித்துள்ளது. புலன் விசாரணை அதிகாரி – 9840558992, ஆய்வாளர் – 9840669982 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், inspocu2@gmail.com என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி உறுதி அளித்துள்ளது.

பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சாமியார் சிவசங்கர் பாபா அதிரடி கைது!