இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், புறப்பட்ட 4 நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து நடுவானில் திடீரென மாயமாகியுள்ளது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணியளவில் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் விமானம் (SJ182) புறப்பட்டது. போயிங் 737-524 ரக விமானமான இது பாண்டியநாக் நகரை நோக்கி பயணித்தது.
விமானம் புறப்பட்ட 4 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 10,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ரேடாருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெண்டன் மாகாண எல்லைக்கு உள்பட்ட ஜாவா கடற்பரப்பில் பயனிக்கும்போது விமானம் மாயமாகியுள்ளது.
26 ஆண்டுகள் பழமைவாய்ந்த விமானமான இது, முதல்முறையாக 1994 ஆம் ஆண்டு மே மாதம் பறக்கத் தொடங்கியது. தற்போது திடீரென நடுவானில் மாயமான நிலையில், விமானம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தேசிய தேடுதல் மற்றும் மீட்பு ஏஜென்சி, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவுடன் இணைந்து விமானம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜகார்த்தா கடற்கரையில் விமானத்தினுடைய உடைபட்ட பாகங்கள் கிடப்பதாக பொதுமக்கள் சிலர் தகவல் கொடுத்துள்ளனர். எனவே காவல்துறையினரும், பிற மீட்புப் படையினரும் அங்கு விரைந்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகங்கள் குறித்தும், மாயமான போயிங் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.