வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறிவரும் நிலையில், விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்கங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி, அதை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் கடும் குளிரிலும், பனியிலும் 30வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தொடர்பாக விவசாய அமைப்புகளுன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுடன் வேறு எந்த திருத்தங்களையும் ஏற்க முடியாது என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை 6வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அந்த கடிதத்தில் வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே செய்யப்படும். விவசாயிகள் விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு தேதி கூறலாம் எனக் கூறியிருந்ததால் விவசாயிகள் அதனை நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில், விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சகம் சார்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், “விவசாயிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. எனவே, விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அழைப்பையும் ஏற்க மறுத்துள்ள விவசாய அமைப்புகள், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளனர்.