தேசிய உழவர் தினமான இன்று (டிசம்பர் 23) டெல்லியில் விவசாயிகள் மதிய உணவை கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

மத்திய பாஜக அரசு புதிய வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு எதிரான இந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும்பனிக்கு இடையே தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் பனியால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், விவசாயிகளுடனான பலகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.

மேலும், சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தெரிவிக்கும்படியும் கூறி மத்திய அரசு எழுதிய கடிதத்தையும் விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் தேசிய உழவர் தினமான இன்று (டிசம்பர் 23) டெல்லியில் விவசாயிகள் மதிய உணவை கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். மூன்றாம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் இன்று தொடர்கிறது.

தொடர்ந்து ஹரியானா விவசாயிகள் 26, 27, 28 தேதிகளில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கி வரி வசூலிப்பதை முடக்குவதாகவும் கூறியுள்ளனர். இதனிடையே டெல்லி நோக்கி வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளை உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத்தில் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். விவசாயிகள் அங்கேயே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசுடன் விவசாயப் பிரதிநிதிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த தீர்வு எட்டப்படாத நிலையில், புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறப்போவதில்லை என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் போது, முதலில் கேலி செய்வது, பின்னர் எதிர்ப்பது, இறுதியில் ஏற்றுக்கொள்வது வழக்கம். இந்த முறையும் அதுதான் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; மத்திய அரசின் கடிதத்தை நிராகரித்த விவசாயிகள்