ரஜினி மன்னிப்பு கேட்கா விட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரித்துள்ளது.

துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா கடந்த 14ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முரசொலியை வைத்திருந்தால் தி.மு.க.காரன் என சொல்லிவிடலாம். துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளின்னு சொல்லிடலாம் என்று ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் பேசிய ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிக்கை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். ‘பிளாக்’கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய ‘பப்ளிசிடி மேனேஜர்’ என சோ அட்டையிலேயே வெளியிட்டார்” என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரஜினியை சமூக வலைதளங்களில் பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் இவ்விவகாரத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஈ.வெ.ரா தொடர்ந்து இந்து கடவுள் விக்கிரகங்களை உடைப்பது, இந்து கடவுள்கள் பற்றி இழிவாக பேசுவது போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தவர் தான். ஆகவே நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை” என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23.1.2020 காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.