நாடு முழுவதும் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, வாகனங்களை இலவசமாக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று (டிசம்பர் 13)நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கப்படும் என்றும், டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பஞ்சாபில் இருந்து டெல்லியை நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அதேபோல் டெல்லியை ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை போராடும் விவசாயிகள் முற்றுகை இட்டுள்ளதால், அங்கு கட்டணம் ஏதுமின்றி வாகனங்கள் சென்றன.
இந்நிலையில், டிசம்பர் 14, தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 32 வேளாண் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரயில் மறியல் மற்றும் டெல்லியை நோக்கி வரும் சாலைகளை மறித்து போராட்டங்களை முன்னெடுக்கவும் விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் மீண்டும் பேச விரும்பினால் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், முதலில் அந்த மூன்று சட்டங்களை திரும்பிப் பெறுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தால் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு நுழையும் எல்லைப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீவிரமடையும் டெல்லி முற்றுகை; டிராக்டர் அணிவகுப்பில் கிளம்பிய பஞ்சாப் விவசாயிகள்